திருநெல்வேலி:திமுக மகளிரணி சார்பில் தலைநிமிர்வோம் தடம்பதிப்போம், களம்காண்போம் என்ற தலைப்பில் இளைம்பெண்கள் திமுகவில் இணையும் நிகழ்வு, வள்ளியூரில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புதிதாக திமுக மகளிரணியில் இணைந்த இளம்பெண்களுக்கு உறுப்பினர் படிவங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தச் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது திராவிட இயக்கம்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்பட்டன. இந்த நிலையை மாற்றி சமநிலையை, சமூக நீதியை உருவாக்கியது திராவிட இயக்கம்தான். இதற்காக தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பல போராட்டங்கள் நடத்தி சிறை சென்று, பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர்.
இன்று மத்தியில் ஆளும் அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு குழு அமைத்துள்ளது. ஆனால் அந்தக் குழுவில் பெண்களுக்கு வாய்பளிக்கப்படவில்லை. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் குரல் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும், உங்கள் பிரச்சினைகள், உங்கள் தேவைகள், கருத்துக்கள் ஆகியவற்றை பதிவு செய்து புதிய பாதையை உருவாக்க வேண்டும்.