பாளையங்கோட்டை (நெல்லை): சாதி மதம் என்ற பெயரால் தமிழ்நாட்டில் யாரும் நுழைந்து விட முடியாத நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழியன் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் பொருநை இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
'தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை' இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம், நூற்றாண்டு மண்டபம், மேலக்கோட்டை வாசல், பி.பி.எல். திருமண மண்டபம், வ.உ.சி மைதானம் ஆகிய இடங்களில் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில் கருத்தரங்கம், கவியரங்கம், ஓலைச்சுவடிகள் கண்காட்சி, மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
நேற்று (நவ. 26) மாலையில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இலக்கிய வழி புத்தகத் திருவிழா மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதற்கு முன் சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே நடந்த புத்தக திருவிழா தற்போது அனைத்து இடங்களிலும் நடப்பதாகவும், புத்தகங்களை பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் கைகளிலும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது நடத்தப்படும் பொருநை இலக்கியத் திருவிழா மிக முக்கியமான ஒன்று எனக் கூறி கன்மொழி எம்.பி, தமிழ்நாட்டில் இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் கொண்டாடக்கூடிய நிலை இல்லாதிருந்ததாகவும், அதனை மாற்றும் விழாவாக பொருநை இலக்கிய திருவிழா அமைந்துள்ளதாகவும் கூறினார்.
பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் தங்கள் இறுதி மூச்சு வரை புத்தகங்களை வாசித்ததாக தெரிவித்த கனிமொழி, புத்தகங்கள் தரும் உலகம் என்பது நம்முள் பல கேள்விகளை, பல கருத்துக்களை முன்வைக்கும் என்றார்.
புத்தகம் படித்தால் சிந்தனை விரிவாகும், புத்தகத்தை படித்து படித்து சிந்திக்கும் தலைவன் தான் நம்மை அழைத்துச் செல்லும் தலைவனாக இருக்க முடியும், அத்தகைய தலைவர்கள் தான் திராவிட இயக்க தலைவர்கள் என்று கனிமொழி தெரிவித்தார்.
திராவிட இயக்கம் என்பது தேச விடுதலைக்காக மட்டுமல்ல மக்கள் விடுதலைக்காகவும் பாடுபடும் இயக்கம் என்றார். விடுதலை குறித்து தைரியமாக பேசிய இயக்கமும் திராவிட இயக்கம்தான். சமுதாயத்தில் நமது கலாச்சாரம், நமது மொழி, சுயமரியாதை ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று திராவிட இயக்கத் தலைவர்கள் தான் தொடர்ந்து எழுதி வருவதாக கனிமொழி கூறினார்.
தமிழ்நாட்டில் ஜாதி மதம் என்ற பெயரால் யாரும் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றால் அதற்கு திராவிட இயக்க எழுத்தாளர்கள் தான் காரணம். பல இடங்களில் எல்லோரும் சமம் என்று பேசி வருபவர்கள், நம்மை சமமாக நடத்துவதில்லை. மொழியை சமமாக நடத்துவதில்லை கீழடி ஆய்வுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை, ஆனால் எங்கு சென்றாலும் தமிழ், தமிழ் என்று பேசுகிறார்கள் ஆனால் தமிழுக்கான உரிய அங்கீகாரத்தை தரவில்லை என்றார்.
நம் இலக்கியம், மொழி, சுயமரியாதை ஆகியவற்றை காப்பாற்றி நம் பெருமையை நாம் புரிந்து கொண்டு அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கனிமொழி தெரிவித்தார். முன்னதாக பாளையங்கோட்டை மேல கோட்டைவாசல் சென்ற கனிமொழி எம்.பி அங்கு மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடியை திறந்து வைத்து மேல கோட்டை வாசலை பார்வையிட்டார்.
இதையும் படிங்க:வீடியோ: கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை இழுத்து சென்ற முதலை