தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"முதல்வர் உங்கள் மீது கடும் கோபத்தில் உள்ளார்.. பார்த்து நடந்துக்கோங்க" - அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை யாருக்கு? - தங்கம் தென்னரசு

DMK Councillors issue : நெல்லை மாநகராட்சியில் மேயர் - கவுன்சிலர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுக்க அமைச்சர்கள் நடத்திய பஞ்சாயத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

dmk councilers issue
திருநெல்வேலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:16 PM IST

நெல்லை மேயர் - கவுன்சிலர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுக்க அமைச்சர்கள் நடத்திய கூட்டம்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயர் கவுன்சிலர்கள் இடையேயான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்கள். பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மேயர் மீது குற்றச்சாட்டை சுமத்திய நிலையில், அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அமைதியான முறையில் மாநகராட்சி கூட்டங்களை நடத்துவதற்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சி சுமார் 55 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்ந்த மாமன்ற உறுப்பினர்களும், மற்ற 4 வார்டுகளில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த சில கூட்டங்களாக மாமன்ற உறுப்பினர்களுக்கும், மேயருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு முறையாக கூட்டம் நடத்தப்படாமலும், தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமலும் இருந்து வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து மேயரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி துறை சார்ந்த அமைச்சர் முதல் முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வரை துணை மேயர் ராஜூ உள்பட ஆளுங்கட்சி கவுன்சிலர்களால் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது. நேரடியாக மேயரை மாற்றக் கோரிக்கை வைத்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சரையும், நெல்லை மாநகராட்சியின் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் சந்தித்தனர்.

முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய பாளையங்கோட்டை எம்எல்ஏவுமான அப்துல்வகாப் தான் மாநகராட்சியில் நிலவும் குழப்பத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. அதாவது மேயராக சரவணனை அறிவித்த கட்சி தலைமை அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல், அப்துல் வகாப் நேரடியாக மேயருடன் மோதியுள்ளார். அதனால் தான் அப்துல் வகாப் தனது மாவட்ட செயலாளர் பதவியையும் இழந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் தற்போது வரை அப்துல்வகாப்பின் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ந்து மேயருக்கு எதிராக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் கட்சி தலைமையின் அறிவுறுத்தல் படி, நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு தலைமையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநகராட்சியின் மேயர் துணை மேயர் மற்றும் மண்டல சேர்மன்களை நேரில் அழைத்து அறிவுரை வழங்கி கூட்டத்தை அமைதியாக நடத்த அறிவுறுத்தினார்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மாநகராட்சி கூட்டம் நடத்தப்படாமல் இருந்து வந்தத நிலையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தல் படி கடந்த 4 ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென மாமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அப்துல்வகாப் பேசி முடித்து கூட்டத்தை விட்டு வெளியேறிய நிலையில், மாமன்ற கூட்டத்தில் இருந்து பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வெளியேறினர்.

மேலும் மாமன்ற கூட்டம் நடைபெற்ற அன்று மாவட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தி வார்டு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக மேயர் துணை மேயர் மற்றும் ஆணையாளரை சந்தித்து கோரிக்கை வைப்பதற்கு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் புகைப்படம் எடுத்ததாகவும் குறிப்பாக பெண் கவுன்சிலர்களை புகைப்படம் எடுத்ததாகவும் கூறி சர்ச்சை கிளம்பியது.

மேயரின் ஆதரவாளரான அந்த நபரை கண்டித்தும், மேயர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் மேயர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியும் கவுன்சிலர்கள் போர் கொடி தூக்கினர். ஒட்டுமொத்த திமுக கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து மேயர் கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கட்சி தலைமை முடிவெடுத்தததாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, தங்கம் தென்னரசு இருவரும் நெல்லை வந்தனர். தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களையும் வரவழைத்து, அங்கு நடைபெறும் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதையொட்டி அங்கு குவிந்த திமுக கட்சி தொண்டர்கள் அனைவரையும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கூட்டரங்கில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தங்கம் தென்னரசு நெல்லை மாநகராட்சியின் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான், நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் மற்றும் திமுகவைச் சேர்ந்த 41 மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் கூட்ட அரங்கில் அனுமதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிடம் அங்கு நடக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாகவே அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அப்போது பெரும்பான்மையான கவுன்சிலர்கள் பேசும்போது, மேயர் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை. ஒப்பந்தம் கொடுக்கும் விவகாரத்தில் எங்களது ஆலோசனைகளை ஏற்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் சேர்ந்து மாநகராட்சி மேயரை சரமாரியாக கேள்விகள் கேட்டு டோஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். எனவே பார்த்து நடந்து கொள்ளுங்கள் என மேயர் மற்றும் கவுன்சிலர்களை அமைச்சர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் மாநகராட்சி திட்டங்களுக்கு விடப்படும் டெண்டர்களில் ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கமிஷன் தொகையை பிரித்துக் கொடுப்பதில் தான் கவுன்சிலர்கள் மேயர் இடையே பிரச்சனை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் சண்டை போடாமல் கிடைக்கும் தொகையை சமமாக பிரித்துக் கொள்ளும்படி அமைச்சர்கள் அறிவுரை வழங்கியதாகவும் தெரிகிறது.

மேலும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அமைதியாக வரும் காலங்களில் மாமன்ற கூட்டத்தை நடத்த மீண்டும் அறிவுரையும் வழங்கப்பட்டது. வார்டுகளுக்கு தேவையான பிரச்சனைகளை நேரடியாக மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து தெரிவிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் கவுன்சிலர்கள் இடையே இனி பிரச்சினை வரக்கூடாது.

தங்களுக்கு தேவையான வார்டுகளுக்கு உள்ள கோரிக்கைகளை மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவித்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அனைத்து பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தனியாக ஒரு அதிகாரியையும் விரைவில் நியமிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மேயர் இடையே நடைபெற்று வந்த போராட்டத்தை முடித்து வைக்க சம்பந்தப்பட்ட துறையை அமைச்சரும் மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சரும் நேரடியாக களமிறங்கி பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம் நெல்லை மாநகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: பேருந்துகளுக்கு முண்டியடித்த மக்கள்! கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்த தாம்பரம்!

ABOUT THE AUTHOR

...view details