திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 293 பயனாளிகளுக்கு 22 லட்சத்து 3 ஆயிரத்து 280 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “வெளிநாடுகளுக்கு தமிழர்களை வேலைக்கு அனுப்ப 103 பேர் பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று பாதிப்படையும் நபர்கள் அனைவரும் போலியான நபர்கள் மூலமே வேலைக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட நான்கு பேர் மீது, இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரேன் நாட்டில் படித்து மீண்டும் தமிழ்நாட்டில் அவர்கள் பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளைத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ள பாடத்திட்டத்திற்கும் இங்குள்ள பாடத்திட்டத்திற்கு வித்யாசம் இருப்பதால் மருத்துவம் படிக்கவே தொடருவதற்கு மாணவர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை தூதரகங்கள் மூலம் செய்துகொடுப்பதற்கு அரசு தயாராக உள்ளது.
மத்திய அரசிடம் உக்ரேனில் படித்த தமிழ்நாடு மாணவர்கள் உள் நாட்டில் மருத்துவப்படிப்பைத் தொடர தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். நீட் தேர்வு இருப்பதால் அதனை செயல்படுத்தமுடியவில்லை. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது” என்றார்.