நெல்லை மாவட்டம், வள்ளியூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர் பழனி சங்கர். இவர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக குற்றம்சாட்டி அதே பகுதியைச் சேர்ந்த திமுகவினர் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்தப் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, திமுக மாவட்டச் செயலாளர் தலைமையில், அக்கட்சியின் எம்.பி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.
முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தலைமையில் வந்த அதிமுகவினர், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாகப் புகார் அளித்த விவகாரம் உள்நோக்கம் கொண்டது எனவும்; திமுக எம்.பி ஞானதிரவியம் மீது ஒரு பெண் மோசடி புகார் அளித்ததற்கு அரசு வழக்கறிஞர் தான் காரணம் எனவும்; அதை மனதில் வன்மமாக வைத்துக்கொண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக எம்.பி., மீது உள்ளப் புகாரை உடனடியாக விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்; புகார் அளிக்க காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்திருந்தனர்.
திமுகவைச் சேர்ந்த பலர், காவல் கண்காணிப்பாளரை சந்திக்கச் சென்ற நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று பேரை மட்டுமே அனுமதித்ததாக காவல் துறையினரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.