திருநெல்வேலி:தமிழ்நாட்டில் மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்த கடந்த 2000ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து மீனவ மக்கள் ஒரு சிலர் உயர் நீதிமன்றத்தை நாடிய போதிலும் அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உவரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் சுருக்குமடிவலை மூலம் மீன் பிடிப்பதாகத் தெரிகிறது. இது குறித்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் குமார் உள்ளிட்ட அலுவலர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், அரசு அலுவலர்களைத் தரக்குறைவாக, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் காவல் துறையினர் கண் முன்பே நடைபெற்றதாக தெரிகிறது. இதனை அங்கிருந்து நபர் ஒருவர் செல்போனில் படம்பிடித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது.
அரசு அதிகாரிகளை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை அதிரடி வழக்கு பதிவு அந்தோணிராய் அரசு அலுவலர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்றும் அடிக்க கை ஓங்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மீன்வளத்துறை ஆய்வாளர் உத்தண்ட ராமன் அளித்த புகார் பேரில் தற்போது உவரி காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் அந்தோனிராய் மீது சுமார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு அதிகாரியை மிரட்டும் திமுக பிரமுகர்....