திருநெல்வெலி:நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். பாஜக பிரமுகரான இவர் கடந்த 30ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மூளிக்குளத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஐந்து நாட்களாக போராடிய நிலையில் நேற்று (செப்.2) திமுக பிரமுகர் பிரபு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து இன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெகனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். முன்னதாக, நெல்லை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மருத்துவமனையில் வைத்து ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி, ஜெகனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து இன்று அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘ஜெகன் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டதில் முக்கிய குற்றவாளியான திமுக பிரமுகரை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் போராடி வந்த நிலையில், திமுக பிரமுகர் பிரபு சரணடைந்துள்ளார். அப்பகுதியில் பாஜகவை வளர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காக கூலிப்படையை வைத்து ஜெகனை கொலை செய்துள்ளனர் எனவும், திமுக பிரமுகர் மீது ஏற்கனவே 16 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 96 வழக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள் எனவும், அவரது தாய்க்கு வீடு கட்டி கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளேன் எனவும், அது பாஜக கடமை என்றார்.
மேலும், பல்லடத்தில் பாஜக கிளை தலைவர் மோகன்ராஜா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பல்லடத்தில் வீட்டின் முன் மது அருந்த வேண்டாமென கூறியதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது எனவும், கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளது என்றார்.