திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நபர்கள் பதவி வகித்து வருகின்றனர். மீதம் உள்ள நான்கு வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சரவணன், திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்து வருகிறார். இந்நிலையில், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரா இருந்த அப்துல் வஹாப்பிற்கும், மேயருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்துள்ளது.
இதனால் அப்துல் ஆதரவாளர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி வந்தனர். இதனால் ஏற்பட்ட மோதலால், அப்துல் வஹாப்பை பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டது. அதன் பின்னர், அப்துல்-க்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் டி பி எம் மைதீன்கானை மாவட்டப் பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்தது.
இந்நிலையிலும், திமுக கவுன்சிலர்கள், மேயர் சரவணன் தங்களை மதிப்பதில்லை என்றும், மக்கள் பிரச்னைகளை காது கொடுத்து கேட்பதில்லை என்றும் கூறி, மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் அனைத்து வார்டுகளையும் சமமாக கருதாமல், தனக்கு வேண்டப்பட்ட வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாகவும், மாநகராட்சி திட்டப் பணிகளில் முறைகேடு செய்வதாகவும் திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி விவகாரத்தில் அதிரடி முடிவெடுக்க திமுக தலைமை முடிவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், அதன்படி மாநகராட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் திமுக கவுன்சிலர்களை கண்காணிக்க ரகசிய குழு ஒன்றை திமுக தலைமை அமைத்ததாக கூறப்படுகிறது.
அதன் வெளிப்பாடாக, திமுக கவுன்சிலர்கள் மூன்று பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருநெல்வேலி மாநகராட்சி 6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ், 20வது வார்டு கவுன்சிலர் மன்சூர், 24-வது வார்டு ரவிந்தர் மற்றும் ஏழாவது வார்டு கவுன்சிலர் இந்திரா மணியின் கணவரும், திமுக பிரதிநிதியுமான மணி என்ற சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“அதிமுக - பாஜகவுக்கு இடையே அரசியல் அன்டர்ஸ்டாண்டிங் உள்ளது” - ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு!