தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை மாநகராட்சி கூட்டத்தைப் புறக்கணித்த கவுன்சிலர்கள்.. தீபாவளி கமிஷன் தான் காரணமா..? பின்னணி என்ன? - Nellai Corporation meeting

தீபாவளி செலவுக்குப் பணம் கேட்டுக் கொடுக்காத காரணத்தால் மக்கள் பிரச்சனை பேச வேண்டிய மாநகராட்சி கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தார்களா? என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

dmk councilors boycotted the Tirunelveli corporation meeting
நெல்லை மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 7:39 PM IST

திருநெல்வேலி:மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் மாதம் ஒருமுறை மாமன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (நவ.8) மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் மாமன்ற கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காலை 11 மணி கடந்த பிறகும் மேயர், துணை மேயர் மற்றும் 55 மாமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட மன்ற அரங்கிற்கு வராமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

10 மணிக்கு மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மாமன்ற அரங்கத்திற்கு வந்த நிலையில், அரை மணிநேரம் கடந்தும் மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட வரவில்லை. மேலும், வார்டு 55 மற்றும் வார்டு 5-ஐ சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் மன்ற கூட்டத்திற்கு வந்தனர்.

இந்நிலையில், அவர்களும் ஆணையரிடம் அனுமதி கேட்டு மீண்டும் வெளியே சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து, சுமார் 30 நிமிடம் காத்திருந்த மாநகராட்சி ஆணையரும் திடீரென அரங்கை விட்டு வெளியேறினார். மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமன்ற கூட்டத்திற்கு வராமல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கூடியிருந்தனர்.

கூட்டத்தை புறக்கணித்ததன் பின்னணி என்ன? ஏற்கனவே, நெல்லை மாநகராட்சியில் மேயர் - கவுன்சிலர்கள் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதாவது, முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் மற்றும் மேயர் சரவணன் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மாவட்ட செயலாளரின் ஆதரவு பெற்ற திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, 40-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தன்வசம் வைத்துள்ளார்.

எனவே, அவர்கள் மூலம் தொடர்ச்சியாக, மாநகராட்சி மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் மூலம் மேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் மாவட்ட செயலாளர் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதை நிரூபிக்கும் வகையில், ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தர்ணா போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். உள்கட்சி பிரச்சனை காரணமாக, நெல்லை மாநகராட்சியில் மேயர் - கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டு மக்கள் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை:இச்சம்பவம் திமுக தலைமை வரை சென்றதை அடுத்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் சமீபத்தில் கவுன்சிலர்கள் - மேயர் இடைய சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்பதால் தொடர்ச்சியாக, நெல்லை மாநகராட்சியை சேர்ந்த ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதேபோல், மேயரும் கவுன்சிலர்களை அரவணைத்து செல்லாமல் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கட்டட அனுமதி பெறும் விவகாரத்தில் கவுன்சிலர்கள் மோதல்:குறிப்பாக, மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அதற்கு மேயர் உடந்தையாக இருப்பதாகவும், திமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். இதுபோன்ற சூழ்நிலையில்தான் சமீபத்தில் திமுக கவுன்சிலர் ரவீந்தர், மாநகராட்சி அதிகாரி சிவனையா என்பவரிடம் தனது சொந்த பிரச்சனை காரணமாக கடுமையாக மோதிக்கொண்டார். ஒரு கட்டட அனுமதி பெறுவதில் கவுன்சிலர் - அதிகாரியிடையே மோதல் வெடித்தது இருவரும் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேயர் மீதான வெறுப்பே காரணம்:இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, மாநகராட்சி ஆணையர் தனது அறையில் வைத்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, திமுக மாவட்ட செயலாளர் மைதீன் கான் நேரில் வந்து பிரச்சனையை முடித்து வைத்தார். இதுபோன்ற சூழ்நிலையில் மேயர் மீதான வெறுப்பு மற்றும் திமுக கவுன்சிலர்கள் - அதிகாரிகள் இடையே மோதல் போக்கு போன்ற காரணங்களால்தான் இன்று மாநகராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் அறிந்த திமுக கவுன்சிலர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

தீபாவளி வருவதால் கமிஷனுக்காகவே உறுப்பினர்கள் போர்க்கொடி?அதே சமயம், கூட்டத்தை புறக்கணித்ததன் பின்னணியில் கமிஷன் விவகாரமும் இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது, மேயர் சரவணன் ஒவ்வொரு மாதமும் மன்ற கூட்டம் நடைபெறும்போது, கவுன்சிலர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்குவதாகவும்; தற்போது இன்னும் ஓரிரு நாளில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் இந்த முறை நடைபெறும் கூட்டத்தில் கூடுதலாக பணம் வேண்டும் என கேட்டு கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், கூடுதல் பணம் கொடுப்பதற்கு மனம் இல்லாத மேயர் சரவணன், வழக்கம்போல் மாதந்தோறும் கொடுக்கும் தொகையை மட்டும் கொடுக்க திட்டமிட்டு இருந்ததாக தெரியவருகிறது.

எனவே தான், ஆத்திரத்தில் கவுன்சிலர்கள் கூட்டாக சேர்ந்து இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டத்தை புறக்கணித்ததாகவும் ஒரு சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக மேயர் சரவணனை ஈடிவி பாரத் சார்பில் செல்போனில் தொடர்புகொண்ட போது, அவர் பதிலளிக்கவில்லை. அதேபோல், மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவை தொடர்பு கொண்டபோது அவரும் பதிலளிக்கவில்லை.

அரசு நிதியை செலவு செய்வதில் பாரபட்சம்:இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத கவுன்சிலர் ஒருவரை தொடர்புகொண்ட போது, “மாநகராட்சிக்கு அரசு ஒதுக்கும் சிறப்பு நிதியை மேயர் அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்து செலவு செய்யாமல் தனக்கு வேண்டப்பட்ட குறிப்பிட்ட சில வார்டுகளுக்கு மட்டும் செலவு செய்கிறார்.

தனது வார்டில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்து கொடுக்கப்படாமல் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எந்த வேலையும் நடக்காத காரணத்தால் மக்களிடம் ஓட்டு கேட்பதில் சிரமம் ஏற்படும். எனவேதான், இன்றைய கூட்டத்தை புறக்கணித்தோம்” என்றார்.

இதைத்தொடர்ந்து மேயரிடம் கூடுதல் கமிஷன் தொகை கேட்டதாகவும், அதை கொடுக்காத காரணத்தால்தான் கூட்டத்தை புறக்கணித்ததாகவும் பேசப்படுவது குறித்து கேட்டபோது, “ஒரு சில கவுன்சிலர்கள் பணத்துக்காக இன்றைய கூட்டத்தை புறக்கணித்திருக்கலாம். ஆனால், நான் அப்படியல்ல; மக்கள் பிரச்சனைக்காகத்தான் கூட்டத்தை புறக்கணித்தேன்” என அந்த கவுன்சிலர் பதிலளித்தார்.

இதையும் படிங்க:வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவலா? - சென்னையில் NIA அதிரடி ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details