திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 49 இடங்களில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களும், ஒரு வார்டில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர், மூன்று வார்டில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் ஒரு வார்டில் சுயேட்சை கவுன்சிலரரும் உள்ளனர். இந்நிலையில் 16-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன் மேயராக உள்ளார்.
அதேபோல் 1-வது வார்டில் போட்டிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் ராஜு துணை மேயராக உள்ளார். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் பொறுப்பேற்று 1 ஆண்டுகளுக்கு மேலாகியும், தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக கழிவுநீர் கால்வாய் குடிநீர் பிரச்னை உட்பட மக்களின் அன்றாட தேவைகளுக்கு மாநகராட்சி செவி கொடுக்காமல் இருப்பதாக மன்ற கூட்டங்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே குறை கூறி வருகின்றனர். மேலும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளில் முறைகேடு நடைபெறுவதாகவும் புகார் உள்ளது.
நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த குழப்பத்திற்கு திமுகவின் உட்கட்சி பூசலே முக்கிய காரணம். அதாவது மாநகராட்சியின் 49 திமுக கவுன்சிலர்களும், முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் மூலம் அந்த பதவிக்கு வந்தார்கள். குறிப்பாகக் கட்சியில் சாதாரண பொறுப்பிலிருந்த சரவணன் அப்துல் வகாப் மூலம் கவுன்சிலராகி பின்னர் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேசமயம் வழக்கம்போல் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒப்பந்ததாரர்களிடம் சதவீத அடிப்படையில் மாவட்டச் செயலாளர் மேயர் கவுன்சிலர்கள் மற்றும் சிலர் கமிஷன் பெறுவதாகப் புகார் எழுந்தது. மேலும் திடீரென முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் மேயர் சரவணன் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கமிஷன் கொடுக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தான் இந்த மோதலுக்குக் காரணம் எனவும் பலரால் கூறப்பட்டது.
அதேசமயம் கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் அப்துல் வகாப்புக்கு விசுவாசமாக இருந்தனர். எனவே அப்துல் வகாப் தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் தொடர்ச்சியாக மாநகராட்சி மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக குரல் எழுப்ப வந்தார். குறிப்பாக மேயர் சரவணன் தனது அறையில் வைத்து, ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்பதாக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே வெளிப்படையாக குற்றம் சாட்டினர்.
மேலும் மேயரை கண்டித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். மாவட்டச் செயலாளர் மேயர் இடையிலான இந்த மோதல் போக்கு காரணமாக நெல்லை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் பதிக்கப்பட்டது. எனவே இது போன்ற சூழ்நிலையில் உள்கட்சி பூசல் அதிகமானதால் அப்துல் வகாப் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனால் மேயர் சரவணனுக்கு இருந்த பெரும் தலைவலி நீங்கியது என்றே கூறப்பட்டது. எனவே கவுன்சிலர்கள் அனைவரையும் தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் மேயர் ஈடுபட்டார். மேலும் அப்துல் வகாப் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சமீபத்தில் நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பிரச்னை எழுப்பவில்லை.
இந்த நிலையில், மேயர் சரவணன் கமிஷன் தொகையை சரிவர பிரித்து வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாக ஆறாவது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் குற்றச்சாட்டை முன்வைக்கும் பரபரப்பு வீடியோ ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது மேயர் சரவணனை அட்மின் ஆக வைத்து வாட்ஸ்அப் குழு ஒன்று வைத்துள்ளனர். அதில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் உறுப்பினராக உள்ளனர். அந்த குழுவில் தான் கவுன்சிலர் பவுல்ராஜ் ஆடியோ வெளியிட்டுள்ளார்.