திருநெல்வேலி:உவரி மீனவ கிராமத்தில் 300க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்கு மடி வலை மூலம் மீன் பிடித்து வந்துள்ளனர். சுருக்குமடி வலை பயன்படுத்த கடந்த 2000ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனை எதிர்த்து மீனவ மக்கள் ஒரு சிலர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து சுருக்குமடி வலை பயன்படுத்திய மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு அதிகாரிகளைத் தரக்குறைவாக வார்த்தைகளால் திட்டியுள்ளார். காவல்துறையினர் முன்பே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் இதனை தனது செல்போனில் படம் பிடித்த நிலையில் தற்போது அது வைரலாகியுள்ளது.
அரசு அதிகாரியை மிரட்டும் திமுக பிரமுகர் அந்தோணி ராய் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டுவதும் அடிக்க கையை ஓங்குவதும் காட்சியில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, இதுகுறித்து ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமாரிடம் கேட்டபோது, ”சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது. இதனால் இந்த பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர் மிரட்டுவது தொடர்பாக உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் திட்டங்கள் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது - இணை அமைச்சர் அஸ்வினி குமார்