திருநெல்வேலி: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கைக் கடல் பகுதியில் நீடித்த காற்று சுழற்சி, தற்பொழுது மெதுவாகக் குமரிக் கடலை நோக்கி நகர்கிறது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் இன்று(டிச.17) காலை முதலே மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, மாநகர் மற்றும் கிராமப்புறங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, கூடங்குளம் பகுதிகளில் தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது.