மதுரை : புறம்போக்கு இடங்களை கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் கால்நடைகளை வளர்ப்பதற்கும், பராமரிக்கவும் பொதுமக்களுக்கு மந்தை வெளி மற்றும் மெய்கால் புறம்போக்கு இருந்தன.
பொதுநல மனு
இந்தப் புறம்போக்கு நிலம் வேறு எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்த கூடாது என அரசாணை உள்ளது. இது போன்ற மந்தை வெளி மற்றும் மெய்கால் புறம்போக்கு நிலத்தால், கால்நடை வளர்ப்பவர்கள் வாழ்வாதாரம் மேம்படும்.
தற்போது இந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. எனவே, தற்போது மந்தை வெளி மற்றும் மெய்கால் புறம்போக்கு நிலத்தை ஒவ்வொரு கிராமங்களிலும் கண்டறிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மனு தள்ளுபடி
இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மந்தை வெளி மற்றும் மெய்கால் புறம்போக்கு இடங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரருக்கு தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த கூறுவது ஏற்புடையதல்ல மனுதாரர் தனது மனுவை சம்பந்தப்பட்ட தாசில்தார் இடம் கொடுத்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் இவ்வழக்கில் பொதுநலம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : திறந்தவெளி கழிப்பிடமாக இருந்து பசுஞ்சோலையாய் மாறிய புறம்போக்கு நிலம்