திருநெல்வேலி: பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் நாள் கணக்கில் பரிசோதனை மையம் முன்பு காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் நீடித்து வரும் இந்த அவல நிலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ரத்தப்பரிசோதனை முடிவை, டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதால் தான், இந்த தாமதம் ஏற்படுவதாக மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'தற்போது ரத்தப்பரிசோதனை முடிவு வழங்கும் முறை முழுவதும் ஆட்டோமெட்டிக் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. கையால் எழுதி, முடிவு வழங்கும் நடைமுறையினை டிஜிட்டல் முறைக்கு மாற்றுகிறோம். இதுதொடர்பாக கம்ப்யூட்டரில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதால் தான், முடிவு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இரண்டு நாளில் சரிசெய்யப்பட்டு அந்தந்த வார்டுக்கு அருகிலேயே நோயாளிகளின் பரிசோதனை முடிவை கம்ப்யூட்டர் மூலம் பிரின்ட் எடுத்து தர ஏற்பாடு செய்யப்படும். இனி காலதாமதம் நிகழாது. குறிப்பிட்ட பிளாக் வாசல் அருகில் இதற்காக கவுன்ட்டர்கள் அமைத்து கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்ற உபகரணங்களும் அமைக்கப்படும்.
திருநெல்வேலி மருத்துவமனையில் ரத்தபரிசோதனை முடிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது - டீன் ரவிச்சந்திரன் நோயாளிகளிடம் ஊழியர்கள் கண்ணியக் குறைவாக நடப்பது குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 2,200 முதல் 3,000 பேர் வரை வெளிநோயாளிகளாகவும் 2,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெறுகின்றனர். மேலும் நாள்தோறும் 600 முதல் 800 ரத்தப்பரிசோதனை மாதிரிகளும் 200 முதல் 400 நீர் பரிசோதனை மாதிரிகளும் பெறப்படுகின்றன”என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் இழுத்தடிப்பு... மக்கள் கடும் அவதி...