தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்குநேரி சம்பவத்திற்கு மூலக்காரணம் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்! - கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

நாங்குநேரி அருகே பள்ளி மாணவன், சக மாணவர்களால் வெட்டப்பட்ட கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்களில் ஒருவர் ஏற்கனவே சமூக வலைதளத்தை பார்த்து வெடிகுண்டு தயாரித்த வழக்கில் சம்மந்தப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 12, 2023, 9:52 PM IST

திருநெல்வேலி:நாங்குநேரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது பெருந்தெரு என்ற பகுதி. இப்பகுதியில் வசிக்கும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அம்பிகாவதி என்பவர் சத்துணவில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார், மேலும் இவர் வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.

அம்பிகாவதியின் மகன் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அம்பிகாவதி மகனிடம் சிலர் சாதி பாகுபாடு காட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக வகுப்பறையில் வைத்து மாணவனிடம் மற்ற மாணவர்கள் கடைக்கு சென்று போதை வஸ்துக்கள் வாங்கி வரும்படி கட்டளையிட்டதாகவும், சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்கு படிப்பை தொடர மனம் இல்லாத மாணவன் தனது தாயிடம் முறையிட்டு உள்ளார். எனவே தாயும் பள்ளியில் நிலவும் சாதி பாகுபாடு குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பிரச்சினையில் தொடர்புடைய மாணவர்கள் கடந்த ஒன்பதாம் தேதி இரவு அத்துமீறி பாதிக்கப்பட்ட மாணவனை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இந்த தாக்குதலைத் தடுக்க சென்ற மாணவனின் சகோதரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சாதிய வன்மத்தில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக நாங்குநேரி என்ற ஒற்றை வார்த்தை திரும்பும் இடமெல்லாம் ஒலித்து வருகிறது. புத்தகம் தூக்க வேண்டிய கையில் மாணவர்கள் சாதி வெறியோடு அரிவாளை தூக்கிய சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சாதிய வன்மத்தால் ரத்தம் சொட்ட சொட்ட பட்டியலின மாணவன் கொலை வெறியுடன் தாக்கப்பட்டுள்ளார்.

எனவே இந்த சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் சினிமா நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகிய இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் மற்றும் அவரது சகோதரியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்பட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்து அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். பள்ளியில் ஏற்பட்ட சாதாரண பிரச்சினைக்காக கையில் அரிவாளுடன் இரவில் வீட்டுக்குள் புகுந்து வெட்டும் அளவுக்கு மாணவர்களுக்கு வெறி ஏற்பட்டது எப்படி என்ற கேள்வி பலரின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வள்ளியூரில் பெட்ரோல் குண்டு தயாரித்த வழக்கில் கைதான மற்றொரு மாணவன் தான், நாங்குநேரி பிரச்சினைக்கு மூல காரணம் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வள்ளியூரை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன் youtube-ஐ பார்த்து பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து வீசுவது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

அந்த வீடியோவில் மூன்று சிறுவர்கள் மற்றும் இரண்டு நபர்கள் இருப்பது போன்றும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் இந்த வீடியோவுக்கு பின்னணியில் அவர்கள் சாதிய பெருமை பேசியிருந்தனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து வள்ளியூர் காவல் துறையினர் பெட்ரோல் குண்டு தயாரித்த சிறுவர்கள் மற்றும் இரண்டு நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவன் தான் தற்போது பிரச்சினைக்குள்ளான நாங்குநேரி பள்ளியில், 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெட்ரோல் குண்டு வழக்கில் நீதிமன்ற விசாரணையின் போது மாணவன், 12 ஆம் வகுப்பு படித்து வருவதால் அவரின் எதிர்கால நலன் கருதி தினமும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து பள்ளிக்கு சென்று வர நீதிபதி சலுகை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதன் பெயரில் கடந்த சில தினங்களாக அந்த சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளான். அந்த வகையில் கடந்த 9ஆம் தேதி சிறுவன் பள்ளிக்கு செல்லும் போது அங்கே அம்பிகாவதி தனது மகனுக்கு பள்ளியில் நிலவும் பிரச்சனை குறித்து புகார் அளிப்பதை பார்த்ததாக கூறப்படுகிறது.

உடனே சிறுவன், அம்பிகாவதி மகனிடம் பிரச்சினை செய்து வரும் மாணவர்களை தொடர்பு கொண்டு, "டேய் உங்களை பற்றி அவனின் தாயார் பள்ளியில் புகார் அளிக்கின்றனர்" என்று அவர்களிடையே வெறியை தூண்டும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.

சிறுவன் அளித்த தகவலின் பெயரில் தான் தங்கள் மீது பள்ளியில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் மாணவர்களுக்கு தெரிய வந்துள்ளது. அதன் பிறகே அவர்கள் ஆத்திரத்தில் அன்று இரவு அம்பிகாவதியின் வீட்டில் நுழைந்து அவரது மகனை கொலை வெறியுடன் தாக்கி உள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் நாங்குநேரி சம்பவத்திற்கு மூலக்காரணம் பெட்ரோல் குண்டு தயாரித்த வழக்கில் சலுகை பெற்ற மற்றொரு மாணவன் என தெரியவந்துள்ளது.

மாணவனின் எதிர்கால நலன் கருதி நீதிபதி அவனுக்கு அளித்த சலுகை ஒரு மிகப்பெரிய சாதிய வன்மத்தை அரங்கேற்ற துணை புரிந்துள்ளது என்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஒரு வகையில் மாணவர்களின் எதிர்கால நலனை கருதியது நீதிபதியின் கருணை உள்ளம் என்று பார்க்கப்பட்டாலும், படிக்கும் வயதில் பெட்ரோல் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு குற்றம் செய்யும் மாணவர்களுக்கு இது போன்ற சலுகைகள் வழங்குவது தவறு என்பதை சம்பவம் மூலம் உணர முடிகிறது.

இது குறித்து வள்ளியூர் காவல் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்த வழக்கில் கைதான சிறுவன் நாங்குநேரி சம்பவத்தில் தொடர்புடையவன் என்பது உண்மைதான். எனவே நாங்குநேரி வழக்கில் அம்மாணவனை சேர்ப்பது குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனை அடித்த ஆசிரியை- பெற்றோர் போலீசில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details