தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.22 லட்சம் மீட்பு! - சைபர் கிரைம்

நெல்லையில் இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.22 லட்சம் ரொக்கம் சைபர் பிரிவு காவல் துறையினரால் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.23.73 லட்சம் மீட்பு
இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.23.73 லட்சம் மீட்பு

By

Published : Mar 3, 2022, 4:50 PM IST

நெல்லை: நெல்லை மாநகரில் காணாமல் போன செல்போன்கள், மாநகர சைபர் பிரிவு காவல் துறையினரின் மூலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் அந்த செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநகர காவல் ஆணையர் துரை குமார், துணை ஆணையர்கள் சுரேஷ்குமார் (கிழக்கு) சுரேஷ்குமார் (மேற்கு) ஆகியோர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

233 செல்போன்கள் பறிமுதல்

மேலும் இணையதள மோசடிக்குள்ளாகி வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை இழந்த நபர்களுக்குப் பணத்தை மீட்டு, உரியவரிடம் காவல் ஆணையர் ஒப்படைத்தார். அதன்படி இன்று ரூ.33 லட்சம் மதிப்புள்ள 233 செல்போன்களும் இணைய மோசடி செய்யப்பட்ட 26 லட்சத்து 73 ஆயிரத்து 458 ரூபாய் பணமும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் துரை குமார் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நெல்லையில் காணாமல்போன 33 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 233 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதளம் மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும் பரிசுப்பொருட்கள் விழுந்திருப்பதாகக் கூறப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களுக்கும், குறுஞ்செய்தி மூலம் ஓடிபி பெற்று பணமோசடி செய்த இணையதள குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இணையப் பண மோசடியைத் தடுக்க உதவி எண்

மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளை முடக்கி ஒட்டு மொத்தமாக 26 லட்சத்து 73 ஆயிரத்து 458 ரூபாய் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் இணையக்குற்றம் அதிகரித்து வருகின்றது. அதைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இணையப் பண மோசடி குற்றம் கண்டறியப்பட்டால் ’1930’ என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இணைய வழியான பணமோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இணைய குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மிக குறைவு. மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும்பாலும் போலியான முகவரிகளைக் கொடுத்துள்ளனர்.

பழகிய நண்பரே மோசடி செய்த ரூ.22 லட்ச பணம்

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வட மாநிலத்திற்குச் சிறப்பு குழுக்கள் விரைவில் அனுப்பப்பட்டு, கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாகப் பணத்தை இழக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். மாநகரில் போக்குவரத்தைச் சரிசெய்யவும் காவலர்கள் பற்றாக்குறையைச் சரிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.

அதேபோல், நெல்லையைச் சேர்ந்த ஜெயராஜ் தவமணியை அவரது நண்பரே ஏமாற்றியுள்ளார். அதாவது ஜெயராஜ் தவமணியின் செல்போனை வாங்கி, அதன்மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.22 லட்சம் பணத்தை, அவரது நண்பர் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு ஜெயராஜ் தவமணியின் பணத்தை மொத்தமாக மீட்டு கொடுத்துள்ளதால் இன்ப அதிர்ச்சி அடைந்த தவமணி, தனது பணம் திரும்பக் கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும்; நெல்லை மாநகர காவல் துறைக்கு மிக்க நன்றி எனவும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சசிகலா தலைமை ஏற்க வேண்டும்..டிடிவி வழிநடத்த வேண்டும் - முன்னாள் எம்எல்ஏ

ABOUT THE AUTHOR

...view details