திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்கள் அமைந்துள்ளன. இதில் மேலப்பாளையம் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படும் நிலையில், முறையாக குப்பைகள் அல்லப்படாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேலப்பாளையம் மண்டல கவுன்சிலரின் தந்தை, தனது மகளின் வார்டு பகுதியில் இருக்கும் குப்பைகளை அள்ளி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது திருநெல்வேலி மாநகராட்சியின் 45 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கதிஜா இக்லாம் பாசிலா. இவர் நெல்லை மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல சேர்மன் ஆகவும் உள்ளார்.
நெல்லை மாநகர் பகுதிகளில் இருக்கும் குப்பைகளை எடுப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 45வது வார்டில் பல நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் வந்து குப்பைகள் அல்லப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நிபா வைரஸ் பரவல்: கேரள பயணிகளிடம் தீவிர சோதனை! கொட்டும் மழையிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணி தீவிரம்!
இந்த நிலையில் மேலப்பாளையம் மண்டல சேர்மனின் தந்தையும், திமுக பகுதிச் செயலாளருமான துபயி சாகுல், தனது சகாக்களுடன் சேர்ந்து 45 வது வார்டு பகுதியில் இருக்கும் குப்பைகளை அள்ளி வண்டி மூலம் மாற்று இடங்களில் கொண்டு கொட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு முன் ஒரு வார்டுக்கு 5 தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ளி வந்த நிலையில் தற்போது இரண்டு அல்லது மூன்று நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பல பகுதிகள் குப்பை மேடாகவே காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் - கவுன்சிலர்களிடையே மோதல் போக்கு நிலவுவதாக சொல்லப்படும் நிலையில், திமுகவை சேர்ந்த பகுதி செயலாளர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Parliament Special Session : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..! முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா?