திருநெல்வேலி:கரோனா மூன்றாவது அலை குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், எல்இடி திரையுடன் கூடிய விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று (அக்.2) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு ஆடியோவையும் வெளியிட்டார். திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஆட்சியர் கூறுகையில், மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்கள், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரளா பயணிகளுக்கு தொற்று அறிகுறி இருப்பின் பரிசோதனை செய்கிறோம். தேவைப்பட்டால் கேரளாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் 100 விழுக்காடு பரிசோதனை நடத்த தயாராக இருக்கிறோம். மாவட்டத்தில் 24 மணி நேரம் இயங்கும் வார் ரூம் செயல்பட்டு வருகிறது.