நெல்லை:குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ஆம் ஆண்டு கரசேவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை மதக்கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
குஜராத் கலவரம் நடந்த போது பிரதமர் நரேந்திர மோடி அங்கு முதலமைச்சராக இருந்தார். இந்த நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் மோடி குறித்தும் பிபிசி செய்தி நிறுவனம் சமீபத்தில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் பல தகவல்கள் திணிக்கப்பட்டு இருப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறி ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மாணவர்களும், எதிர்க்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வகுப்பறை ஒன்றில் கடந்த 25ஆம் தேதி தடை செய்யப்பட்ட ஆவண படத்தை ஒளிபரப்பு செய்ததாகவும் அதே போல் கடந்த 30ஆம் தேதி பல்கலைக்கழக விடுதியில் ஆவண படத்தை ஒளிபரப்பியதாகவும் புகார் தெரிவித்து ஏபிவிபி மாணவர் இயக்கத்தினர் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.