திருநெல்வேலி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, அம்பாசமுத்திரம் ஆகியப் பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
அதிகபட்சம் பாபநாசம் அணைப்பகுதியில் 275 மி.மீ., மழை பதிவானது. தொடர் மழையால் மலைப்பகுதியில் இருந்து அணையை நோக்கி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது.
நிரம்பி வரும் அணைகள்
அதேபோல் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், 9 அடி உயர்ந்துள்ளது. பாபநாசம் அணைக்குத் தற்போது விநாடிக்கு 6,530 கன அடி நீரும்; மணிமுத்தாறு அணையில் விநாடிக்கு, 1,248 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல கொடுமுடியாறு, நம்பியாறு, சேர்வலாறு ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தொடர்ந்து மலைப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், எந்த நேரமும் அணை நிரம்பும் சூழல் உள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஐஏஎஸ், ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அலுவலர்கள் இன்று பாபநாசம் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அணையின் நீர்மட்டம் குறித்தும் நீர்வரத்து குறித்தும் அலுவலர்களுடன் கேட்டறிந்தனர்.