திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருகே உள்ள வடுகர் பட்டியைச் சேர்ந்தவர் ரகுவரன். இவர் திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை அடுத்த அன்பு நகரில் வீடு கட்டும் தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.19) மதியம், நெல்லை வேந்தன்குளத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் நடைமேடை கூரையில் ஏறிய இவர், அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த மேலப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள், ரகுவரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் பேருந்து நிலைய கூரையில் இருந்து கீழே குதிக்க வேண்டாம் என்றும், பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்குமாறும் போலீசார் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் தனது காண்ட்ராக்டர் காளி என்பவர், தனக்கு சம்பள பாக்கியாக 3,000 ரூபாய் தர வேண்டும் எனவும், அதனை தந்தால்தான் கீழே குதிக்கும் முயற்சியை கைவிடுவேன் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து கீழே குதிக்க முயன்ற ரகுவரனை துரிதமாக செயல்பட்டு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர். இருப்பினும் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. பின்னர் மயக்கம் தெளிய வைக்கப்பட்டு, அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையம் முழுவதும் சிறிது நேரத்துக்கு பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.91 லட்சம் நூதன மோசடி