திருநெல்வேலி:சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி, ரஞ்சிதா. நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசைக் கருவிகளை கல்லூரிக்குக் கொண்டு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்த உடன் நேற்று மாலை (மே 10) சொந்த ஊருக்கு பறையிசைக் கருவிகளை கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். இசைக் கருவிகளை கொண்டு செல்ல நடத்துநர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் மாணவியிடம் முனுமுனுத்தபடி இருந்த நிலையில் டிக்கெட் கேட்க வந்தபோது, மாணவியை தவறாகப் பேசி பறை இசைக் கருவிக்கு பேருந்தில் இடமில்லை எனக்கூறி, பாதி வழியில் இறங்கச் சொல்லி உள்ளார்.
உடன் வந்த மற்ற பயணிகள் வற்புறுத்தல் காரணமாக பறை இசைக்கருவிகளுடன் சேர்த்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி, வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். பாதி வழியில் இறங்கி நின்று தனியாக அழுது கொண்டிருந்த மாணவியின் நிலை பரிதாபகரமாக இருந்தது. பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள் உதவியோடு மாணவியை வேறு பேருந்தில் ஏற்றி விட முயன்றபோதும் பெரும்பாலான பேருந்து ஓட்டுநர்கள் இசைக்கருவிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை.
ஒரு வழியாக நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசுப்பேருந்து நடத்துநர் பாஸ்கர், செய்தியாளர்களின் மூலம் மாணவியின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மதுரையில் மாணவியை குறிப்பிட இடத்தில் இறக்கி விடுவதாகக் கூறி, மாணவி கொண்டு வந்த பறை இசைக் கருவிகளுடன் மாணவியை பேருந்தில் ஏற்றிச்சென்றார். ஒரு மாணவி என்று கூட பார்க்காமல் நடத்துநர் அவமரியாதையாக நடந்து கொண்ட சம்பவம் சமூக ஆர்வலர் மற்றும் இசை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.