வரதட்சணை கொடுக்காததால் பெற்ற குழந்தையின் முகத்தை கூட பார்க்காத கொடூர கணவர் மீது மனைவி புகார் திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் கம்மாளர் தெருவை சேர்ந்த முத்தையன் என்பவரது மகள் சிவசங்கரி (எ) நர்மதா. முத்தையன் தனது மகளை சீவலப்பேரி ரோடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மாரிமுத்து மதுரையில் சிவில் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் நர்மதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நர்மதா பிரசவத்திற்காக அம்பாசமுத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்த ஏழு மாதம் ஆன நிலையில், ஏற்கனவே வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய மாரிமுத்து, பெண் குழந்தை பிறந்ததால் நர்மதா மீது மேலும் கோபம் அடைந்துள்ளார்.
இதனால் ஏழு மாதம் ஆகியும் மாரிமுத்து தனது குழந்தையின் முகத்தை கூட பார்க்க செல்லவில்லை எனவும், அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நர்மதாவிடம் வரதட்சனை கேட்டு மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நர்மதா, அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நேற்று நர்மதா அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த நிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி அமுதா அம்பாசமுத்திரம் தாலுக்கா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதால் பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
நேற்று காலை முதல் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் கேட் மூடப்பட்டு ஊழியர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தனது தந்தையுடன் மனு அளிக்க வந்த நர்மதா உள்ளே செல்ல முடியாமல் வாசலில் நின்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில் தகவல் அறிந்து வட்டாட்சியர் சுமதி நேரடியாக வாசலுக்கு வந்து நர்மதாவிடம் விசாரித்தார். அப்போது நர்மதா வரதட்சனை கொடுமை குறித்து வட்டாட்சியரிடம் மனு அளித்ததை தொடர்ந்து, நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் சுமதி உறுதி அளித்தார்.
இதுகுறித்து நர்மதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 லட்சம் வரை வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். பெண் குழந்தை பிறந்துள்ளதால் குழந்தை வேண்டாம் என்று கூறி மேலும் மிரட்டுகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு இதுவரை கணவர் குழந்தையை பார்க்க வரவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கணவரிடம் சேர்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்தேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஒருவர் கூட ஆஜராகாததால் அதிகாரிகள் குழப்பம்!