திருநெல்வேலி: கோவை உக்கடம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் வெடித்தது. இந்த வழக்கை காவல்துறை தொடர்ந்து விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் மாநகர காவல் துறை ஆணையர் அபினேஷ் குமார் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் பகுதியில் நான்கு வீடுகளிலும் பல்வேறு குழுக்களாக காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலப்பாளையம் காதர் மூப்பன் தெருவை சார்ந்த சாஹிப் முகமது அலி (35), சையது முகமது புகாரி (36), முகமது அலி (38), முகமது இப்ராஹிம் (37) ஆகிய நால்வர் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக முகமது அலி, ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயற்சி செய்ததாகவும் அது தொடர்பாக முகமது அலி உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளில் ஏற்கனவே தேசிய புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.