தமிழ்நாடு

tamil nadu

கரோனாவால் ஒரு நிம்மதி... நிரந்தரமானால் நல்லது! - செயல்படுத்துமா அரசு?

கரோனாவால் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடியது மிகவும் நல்லது, குடும்பத்தில் நிம்மதி கிடைத்துள்ளது. நிரந்தரமாக மூடினால் நாட்டிற்கும் குடும்பத்திற்கும் நல்லது எனப் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

By

Published : Apr 14, 2020, 2:03 PM IST

Published : Apr 14, 2020, 2:03 PM IST

Updated : Jun 2, 2020, 5:15 PM IST

tasmac-helps-to-reduce-the-struggle-of-working-class-women
tasmac-helps-to-reduce-the-struggle-of-working-class-women

உலகத்தையே ஆட்டிப் படைத்துவரும் கரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் செத்து மடிகின்றனர். உயிர்க்கொல்லி நோயான இந்த வைரஸ் உலக மக்களுக்கு பலவிதமான அனுபவங்களைத் தினம்தினம் கற்றுக்கொடுக்கிறது.

ஊரடங்கு தவிர வேறு எந்த மருந்தும் இந்தக் கரோனா வைரஸ் தாக்கத்திற்குத் தீர்வாகாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த வகையிலேயே இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் மீண்டும் பழையபடி குடும்பத்துடன் தங்கள் நேரத்தை செலவிட்டுவருகின்றனர். மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பர பொருள்கள் எதுவும் வாங்க முடியாத சூழல் நிலவுவதால் சிக்கனத்துடன் பொதுமக்கள் தங்கள் வாழ்வைக் கழித்துவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருந்தாலும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஏராளமான குடும்பங்கள் நிம்மதி அடைந்துள்ளன. குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் குடிமகன்களின் தொல்லையிலிருந்து பெண்கள் மீண்டுள்ளனர்.

தினம் தினம் சம்பாதிக்கும் பணத்தை மதுவிற்குச் செலவழித்துவிட்டு குடும்பம் நடத்த பணம் கொடுக்காமல் ஊதாரியாகச் சுற்றித் திரிந்த குடிமகன்கள் தற்போது சாராயம் கிடைக்காமல் கிடைக்கும் வருமானத்தை குடும்பத்திற்கு கொடுத்து நிம்மதியாக வாழ்வதாகப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் இனாம் வெள்ளக்கால் பகுதியைச் சேர்ந்த கிராம பெண்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, பலரும் இJகுறித்து ஒருமித்து கருத்து கூறியுள்ளனர்.

மூதாட்டி சொர்ணம்மாள் (72) என்பவர் கூறுகையில், "எங்களுக்கு காய்கறி மளிகைக் கடைகள் மட்டும்தான் தேவை, மதுபானக் கடைகள் தேவையில்லை. மதுபானக் கடையை அடைத்ததால் எங்கள் ஊர் நன்றாக உள்ளது; பிரச்னை இல்லாமல் இருக்கிறது. இப்போது மது கிடைக்காததால் அனைவரும் நிம்மதியாக இருக்கிறோம்" என்றார்.

மூதாட்டி சரோஜா கூறுகையில், "மதுபானக் கடை அடைத்ததால் எல்லாரும் நன்றாக இருக்கிறோம். சாராயத்தால் வீட்டிற்கு எவ்வளவு கேடு. சாராயம் குடிப்பதால் உணவில்லாமல் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள், இது அடைத்திருப்பது ஊரே அமைதியாக உள்ளது. ஊரில் எந்தப் பிரச்னையுமில்லை, கடையை அடைத்தது நாட்டிற்கு குடும்பத்திற்கு எல்லோருக்கும் நல்லது" எனத் தெரிவித்தார்

கரோனாவால் ஒரு நிம்மதி

இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் துரைச்சி கூறுகையில், "சாராயக்கடையை அடைத்திருப்பது நல்ல விஷயம், உண்மை. மதுபானக் கடைகளை அடைத்தவுடன் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இதைக் காரணம் காட்டி தற்போது அடைக்கப்பட்டுள்ளது போல் நிரந்தரமாக அடைத்தால் நன்றாக இருக்கும். மது குடிப்பதால் வீட்டில் 24 மணி நேரமும் நிம்மதி இல்லாமல் பெண்கள் வாழ்ந்துவந்தார்கள். எனவே கடையை மூடியது மிகவும் நல்லது" என்று கூறினார்.

அந்தோணி என்பவர், மதுபானக் கடை அடைத்த பிறகு ஊரில் ஒரு பிரச்னையும் இல்லை. எல்லா வகையிலும் மக்கள் நிம்மதியாக இரவில் தூங்குகிறார்கள். இது ஒன்றுபோதும் என்றார்.

மாரியம்மாள் என்பவர், மதுபானக் கடை இல்லாததால்தான் குடும்பம் நிம்மதியாக இருக்கிறது. குழந்தைகள் நிம்மதியாக இருக்கிறார்கள் குடிப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருந்தி வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் மது குடிக்கும் கணவன் மூலம் கடுமையாகப் பாதிப்படைந்த தங்கம்மாள் என்பவர் கூறுகையில், "மதுவால் எனது கணவர் தனது வருமானம் முழுவதையும் மதுபானக் கடைக்கு கொடுத்துவிட்டார். விவசாயத்தில் கிடைத்த அனைத்து வருமானத்தையும் அதற்கே செலவழித்து விட்டார்.

அதனால் எனது கணவருக்கு உடல்நிலை மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மது கிடைக்காததால் அவரது உடல் நன்றாக உள்ளது. எனவே மதுபானக் கடை இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. இதைக் காரணமாகக் காட்டி நிரந்தரமாகவே டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும்" என்று ஆதங்கத்துடன் வலியுறுத்தினார். இதைப்போல் விவசாய வேலைசெய்யும் பாப்பா என்ற பெண் கூறுகையில், இந்தச் சாராயக்கடையை அடைத்தது நல்லதுதான். தற்போது குடிமகன்கள் 500 ரூபாய் சம்பளம் வாங்கினால் அதை அப்படியே வீட்டில் கொடுத்துவிடுகிறார்கள் எனச் சுட்டிக்காட்டும் அவர், இதுவே சாராயக்கடை இருந்தால் 100 ரூபாய் 200 ரூபாய்தான் கொடுப்பார்கள் எனக் குறிப்பிட்டார். குடிமகன்கள் இதை் பயன்படுத்தி திருந்தி வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

ஆரம்பத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டவுடன் ஒரு சில இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன. இது தொடர்பாகக் காவல் துறையினர் பலரைக் கைதுசெய்தனர். இருப்பினும் தற்போது சில தினங்களாக எங்கேயும் மதுபானம் கிடைக்காததால் பெரும்பாலான குடிமகன்கள் அமைதியாகத் தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

எனவே அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பு. மேலும் டாஸ்மாக் கடையால் வரும் வருமானம் பாதிக்குமே என்று எண்ணாமல் மாற்று வருமானத்தைத் தேடி அதனை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: 'வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்'-மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

Last Updated : Jun 2, 2020, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details