தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். குறிப்பாக, ஊரடங்கின் ஆரம்ப கட்டத்தில் கரோனாவைக்கண்டு ஒட்டுமொத்தமாக பொதுமக்களும் நடுங்கி, வீட்டிற்குள் முடங்கிய நிலையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் மட்டுமே களத்தில் இறங்கி, பணிபுரிந்து மக்களைப் பாதுகாத்து வந்தனர்.
இவர்களின் சேவையைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலான நகராட்சி, மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட அளவில் மட்டுமே, நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அரசு அறிவித்துள்ள இரட்டிப்பு சம்பளம் தங்களுக்கும் கிடைக்கும் என்று, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளார்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படாமல் வழக்கம்போல், ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது.
இதனால், ஏமாற்றம் அடைந்த ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் மனவேதனையுடன் தங்களது பணியைத் தொடர்கின்றனர்.