மனித உரிமை கல்வி மற்றும் காப்புகளத்தின் இயக்குநர் பரதன் சென்னை:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊட்டச்சத்துக்குறைபாட்டின் காரணமாக உயரம் குறைவாகவும், எடை குறைவாகவும் 46 சதவீத குழந்தைகள் இருக்கின்றனர் எனவும், அதனை சரி செய்ய அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்குவதுடன், ரத்தசோகை, எடை , உயரம் குறைவாக உள்ள குழந்தைகளை கண்காணிக்க மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என மனித உரிமை கல்வி மற்றும் காப்புகளம் வலியுறுத்தி உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை கல்வி மற்றும் காப்புகளத்தின் இயக்குநர் பரதன், “திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 50 அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் நேரில் பரிசோதனை செய்தோம். இந்த ஆய்வு 836 குழந்தைகளிடம் நடத்தப்பட்டது.
அதில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வயதிற்கான எடை இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் 22 சதவீதம் பேர் எனக் கூறப்பட்டாலும், ஆய்வில் திருநெல்வேலியில் 45.47 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் 31 சதவீதம் பேர் சராசரி உயரத்தை விட குறைவாக உள்ளனர். 30 சதவீதம் குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையில் இல்லாமல் இருக்கின்றனர்.
இதுபோன்ற குழந்தைகளில் 60 சதவீதம் பேர் ரத்தசோகையாலும், கர்ப்பிணிகளில் 75 சதவீதம் பேர் ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எடை குறைந்தவர்கள் மெலிவுத் தன்மையுடையவர்கள் மற்றும் உயரம் குன்றியவர்களின் முழு அளவிலான வளர்ச்சிக்காக அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
2023 ஜனவரி மாதம் முதல் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் இணை உணவின் அளவைக் குறைத்துள்ளனர். அதனை மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மதிப்பீடு ஒவ்வொரு மாதமும் தாய் முன்னிலையில் செய்யப்பட வேண்டும்.
அங்கன்வாடி மையத்தில் மதிய உணவருந்தும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்காக ஒரு நாளைக்கு நாள் ஒன்றுக்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 1.60 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது சத்தான உணவு கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் 20 ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வாரத்திற்கு ஒரு நாள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் நல மருத்துவர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வளரும் பெண்களுக்கும் சத்தான உணவு குறித்து வாரம்தோறும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையப் பணியாளர் பணியிடங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிறது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் தருவதை வரவேற்கிறோம். ஆனால், அதற்காக தனியாக நிதியை ஒதுக்கீடு செய்யாமல் ஏற்கனவே உள்ள நிதியைக் குறைத்து இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, குழந்தைகளுக்கான திட்டத்தை செயல்படுத்துவதற்குக் கூடுதலாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:"பல்லை போலீசார் பிடுங்கல... கீழே விழுந்ததில் உடைஞ்சிருச்சு..." - இளைஞர் பல்டி