திருநெல்வேலியில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கிய குழந்தைகள் திருநெல்வேலி: நமது நாட்டின் முப்படையையும் சார்ந்த ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. கொடிநாள் நிகழ்ச்சி அன்று பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் நிதியானது போரில் ஊனமுற்றவர்கள் உயிர் நீத்த படை வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் கொடி நாள் வசூலில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 77.60 லட்சம் ரூபாய் கொடி நாள் நிதியாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொடி நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடிநாள் நிதியை வழங்கினார்.
இதனை தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்த நபர்களுக்கு கொடிநாள் நிதி வசூல் செய்யப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் சேவையை கருத்தில் கொண்டு தங்களால் இயன்ற வரையில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கிடுமாறு பேசினார். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியாகிருந்தது.
இதைக்கண்ட நெல்லை சிந்துபூந்துறை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, சுவாமிநாதன் சகோதரர்களின் குழந்தைகள் தாங்களும் ராணுவ வீரர் நலனுக்கான கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிவ பாலசுப்பிரமணியன், நான்காம் வகுப்பு படிக்கும் நிதிஷ்குமார், இரண்டாம் வகுப்பு படிக்கும் நித்திஸ்வரன் மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி சிந்துஜா ஆகியோர் தாங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொடுக்கப்படும் பணத்தை உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வைத்ததை மாவட்ட ஆட்சியரிடம் கொடி நாள் நிதியாக கொடுக்க முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கொடி நாள் நிதி வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்கு குழந்தைகளும் தங்களது பெற்றோரோடு நேரில் வந்து சிறு சேமிப்புக்காக உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கொடி நாள் நிதிக்காக வழங்கினார்.
இதனை தொடர்ந்து அந்த குழந்தைகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பாராட்டி அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சபீர் முகமது ஆலம் மற்றும் அரசுத்துறை முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கலைத் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம்.. வறுமையால் தவிக்கும் குடும்பம்!