திருநெல்வேலி: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (6.03.2023) நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்தார். பின்னர் இன்று நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து விட்டு, அதன்பின் குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் எட்டரை அடி உயரமுள்ள வெண்கல சிலையும் திறந்து வைத்து விட்டு, சாலை மார்க்கமாக நெல்லை வழியாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்றார்.
செல்லும் வழியில் நெல்லை - கன்னியாகுமரி மாவட்ட எல்கையில் உள்ள காவல்கிணற்றில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவ கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அந்த தொழிற்சாலையில் 147 வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதில் பெரும்பான்மையானவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர்கள். அதனை அடுத்து பீகார், மத்திய பிரதேச சார்ந்தவர்களும் அதில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு உணவு எவ்வாறு கிடைக்கிறது, அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள், அவர்களின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு விசயங்களை கேட்டறிந்தார்.
முதலமைச்சர் கேட்கும் கேள்விகளை ஹிந்தியில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மொழி பெயர்த்து தொழிலாளர்களிடம் தெரிவித்து, தொழிலாளர்கள் அளித்த பதில்களை தமிழில் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் திருப்பூரில் தாக்கப்படுவது பற்றியும் பல்வேறு தகவல்கள் வந்தது தங்களுக்கு அச்சமாக இருந்தது எனவும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு முதலமைச்சர் அவை அனைத்துமே வதந்தி தான் என்றும், உங்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்புக்கும் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது என்றும், எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்.