திருநெல்வேலி: பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதிலும், தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து அடுத்ததாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நெருங்குவதால், மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் ஊர்களுக்குத் திரும்புவதற்கும் ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்டுகள் தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக, தமிழகத்திற்குள் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வியாழக்கிழமை தவிர்த்து, வாரத்தின் மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரத்தின் 7 நாட்களுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
இத்தகைய சூழ்நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் ஊர்களுக்குத் திரும்புவதற்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறைக் காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும் ஏதுவாக, கூட்ட நெரிசலைச் சமாளிக்க பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஏழு வந்தே பாரத் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.