திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சந்திப்பு பேருந்து நிலைய பகுதி, சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சி.என்.கிராமம், கைலாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுக் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதனால் பொதுமக்கள் பெரும்பாலானோர் பாதிப்படைந்த நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், ஆங்காங்கே குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதுடன், குளங்களும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களைச் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்த மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்யத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில், மத்தியக் குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர். இந்த குழுவில் சாலைப்போக்குவரத்து துறை தலைமை பொறியாளர் விஜயகுமார், ஜல் சக்தி அமைச்சக இயக்குனர் ஆர்.தங்கமணி, நிதித்துறை துணை இயக்குநர் ரெங்கநாத் ஆதம், ஹைதராபாத்திலுள்ள மத்திய வேளாண் இயக்குநர் முனைவர் கே.பொன்னுசாமி, மின்சார துறை துணை இயக்குநர் ராஜேஸ்திவாரி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் முதலாவதாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து வெள்ளப் பாதிப்பு வீடியோ காட்சிகளைப் பார்த்தனர்.