திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக ஜனவரி மாதத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகளில் இருந்து பல ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஐந்து நாள்களாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கரையோர பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சேதமடைந்தன. அதேபோல் ஆற்றுப்படுக்கையில் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் பலத்த சேதமடைந்தன.
மத்திய குழுவினர் நேரில் ஆய்வு வெள்ளப்பெருக்கின் போது குடிநீர் கிணறுகள், மின் மோட்டார்கள் மூழ்கியதால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது. இந்தச்சூழ்நிலையில், திருநெல்வேலி உள்பட தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் குழு தலைவரான மத்திய இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில், மத்திய வேளாண் துறை இயக்குநர் மனோகரன், நிதித் துறை துணை இயக்குநர் மகேஷ் குமார் ஆகியோர் இன்று (பிப்.4) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சீவலப்பேரி - கான்சாபுரம் பகுதி தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, வருவாய் அலுவலர் பெருமாள், குடிநீர் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டு பாதிப்பு குறித்து விளக்கமளித்தனர். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறுகையில், திருநெல்வேலியில் காலம் தவறி பெய்த மழை வெள்ளத்தால் 163 ஹெக்டர் நெல் பயிர்களும் 5,830 ஹெக்டர் அளவு பிற பயிர் வகைகளும் சேதமடைந்தன. குறிப்பாக 6 கோடி அளவில் விவசாய பயிர்களும் ரூ.8 கோடி அளவில் குடிநீர் திட்டப் பணிகளும் சேதமடைந்துள்ளன” என்றார்.