தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் தமிழக அரசை பாராட்டிய மத்தியக் குழுவினர்.. நெல்லை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபின் பேட்டி! - tirunelveli news

Nellai flood: நெல்லையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக மத்திய குழு மீண்டும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

Nellai flood
நெல்லை வெள்ள பாதிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 1:50 PM IST

திருநெல்வேலி: வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் கனமழையால், நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் நிரம்பி, தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும், தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பாலங்கள், சாலைகள் என பல பகுதிகள் சேதமடைந்தன.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி முதற்கட்ட ஆய்வை மேற்கொண்ட மத்திய குழு அதிகாரிகள், நெல்லை மாவட்டத்தின் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், மத்திய அரசுக்கு முதற்கட்ட அறிக்கையும் சமர்ப்பித்த நிலையில், இரண்டாம் கட்டமாக ஆய்வு மேற்கொள்வதற்கு, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான 7 பேர் கொண்ட பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் குழு நெல்லை வந்தடைந்தனர்.

மேலும், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு முன்னும், மழை வெள்ள பாதிப்பு அடைந்த போதும், மழை வெள்ள பாதிப்புக்குப் பின் சீரமைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ், நெல்லை மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை மத்தியக் குழுவினர், 2 குழுக்களாகச் சென்று பார்வையிட்டனர். நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி தரைமட்டப் பாலத்தை ஆய்வு செய்தனர்.

மேலும், மழை வெள்ள பாதிப்பால் சிதலமடைந்து 3 நாட்களில் சரி செய்யப்பட்ட பாலத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததைப் பார்த்த அதிகாரிகள், விரைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தற்போது அப்பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பாலமும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில், தற்காலிகமாக குழாய்கள் அமைக்கப்பட்டு, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவது தொடர்பாகவும், அதிகாரிகள் மத்திய குழுவிடம் விளக்கம் அளித்தார்கள். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியக் குழு அதிகாரிகளை பேட்டி எடுக்க முயன்ற போது, தமிழக அரசு மழை வெள்ள பாதிப்பு பணிகளை சிறப்பாக கையாண்டுள்ளது என ஒரு வரியில் சொல்லி சென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் உடைப்பு மற்றும் சரி செய்யப்பட்ட பணிகளையும், அம்பாசமுத்திரம் திருநெல்வேலி வட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேத பகுதிகளையும் பார்வையிடுகின்றனர்.

இதையும் படிங்க: அலுவலர்களுடன் இணைந்து நடனமாடிய கோவை ஆட்சியர் கிராந்தி குமார்.. பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்!

ABOUT THE AUTHOR

...view details