நெல்லை தச்சநல்லூர் மணிமூர்த்தீஸ்வர்ர் கோயில் அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆர்சி சபைக்குச் சொந்தமான கல்லறை தோட்டத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், 50-க்கும் மேற்பட்ட கல்லறைகளை சேதப்படுத்தினர். இதைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் எட்டு பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இருதய ஆண்டவர் ஆலயத்தில் இன்று நெல்லை மாவட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ், திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.