நெல்லை:அருகேபாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (45) அவரது உறவுக்கார பெண் தங்கம் மற்றும் தங்கத்தின் 3 வயது மகன் ஆதி ரூபன் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று ராமகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் குழந்தை உள்பட மூன்று பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்து பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இருசக்கர வாகனமும் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டது. பேருந்தின் முன்பக்க சக்கரத்தின் அருகில் மூன்று பேரும் மாட்டிக் கொண்டனர் அதிர்ஷ்டவசமாகச் சக்கரத்திற்குள் சிக்காததால் மூன்று பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.
விபத்தில் ராமகிருஷ்ணன் உட்பட மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டு அவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நெல்லையில் மற்றொரு விபத்து:இதற்கிடையில் இந்த விபத்து ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் வண்ணாரப்பேட்டையில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் பிரதான சாலையில் மற்றொரு தனியார் பேருந்து மின்னல் வேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் மோதியதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற விளாகம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தலையில் மின்கம்பம் முறிந்து விழுந்ததில் அவர் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சீனிவாசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.