தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்நிலையத்தில் இரண்டுபேர் அடித்துக்கொலை; டிஎஸ்பி உட்பட 10 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் - திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் டிஎஸ்பி உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

CBCID filed a charge sheet against 10 people including the DSP in two persons being beaten to death case in Tirunelveli police station
திருநெல்வேலி காவல்நிலையத்தில் இரண்டுபேர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் டிஎஸ்பி உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்

By

Published : Apr 13, 2023, 12:00 PM IST

திருநெல்வேலி:கடந்த 2018-ஆம் ஆண்டு சிவந்திபட்டி காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்த வழக்கில் தற்போது டிஎஸ்பி உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனை வரவேற்கும் விதமாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழக்கு விசாரணைக்காக வந்த மருதூரைச் சேர்ந்த முருகேசன் வாகைகுளத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் ஆகியோர் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் தியாகராஜ நகர் பகுதியில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி மாற்றப்பட்டது.

2019 ஆம் ஆண்டு சிபிசிஐடி வழக்கு விசாரணையை தொடங்கிய நிலையில் இந்த வழக்கில் தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இதனையடுத்து சுபாஷ் சேனை அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் உச்சநீதிமன்றத்தில் இது குறித்து முறையிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை அறிக்கை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி 600 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில் டிஎஸ்பி பொன்னரசு முதல் குற்றவாளியாகவும் மற்ற 9 காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகள் ஆகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை வரவேற்று வழக்கறிஞர் மகாராஜன் திருநெல்வேலி நீதிமன்றம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது எங்களுக்கு முதல் வெற்றியாக இருந்தாலும் கூட இந்த வழக்கை சிபிசிஐடி சரியாக கையாளவில்லை. இன்னும் சிலர் இந்த வழக்கில் தொடர்பில் உள்ளனர். இந்த விவகாரத்தில் இறந்து போன அசோகன் என்ற காவல் அதிகாரி மீது மொத்த குற்றச்சாட்டும் சுமத்தும் விதமாக இந்த குற்றப்பத்திரிகை உள்ளது. தவறு செய்த சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பாதிப்புகளை வெளியே கூறுவார்கள். விசாரணை அதிகாரி அமுதா IAS நியாயமான அதிகாரியாக இருந்தாலும் காலதாமதமான விசாரணையாக உள்ளது” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே இதே நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு மூலம் தான் விசாரணை கைதிகள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் வெளியே தெரியவந்தது. அதாவது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரக பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் கொடூரமாக பிடுங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சார் ஆட்சியர் விசாரணையை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவுப்படி உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புகாருக்கு உள்ளான உதவி காவல் கண்காணிப்பாளர் உட்பட காவல்துறையை சேர்ந்த 11 நபர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-ன் பிரம்மாஸ்திரம்.. கை கொடுப்பார்களா சசிகலா, டிடிவி.. திருச்சியில் மாநாடு வியூகம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details