திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், கனமழை பெய்து வரும் நிலையில் அணையிலிருந்து சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலில் கலக்கும் உபரி நீரை மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத் திட்டமான தாமிரபரணி ஆறு, நம்பி ஆறு, மற்றும் கருமேனி ஆறு இணைப்புத் திட்ட வெள்ள நீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் இன்று(டிச.17) தண்ணீர் திறக்கப்பட்டது. கன்னடியான் அணையிலிருந்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.
முன்னதாக, தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து, கடலில் உபரியாகக் கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீர் மற்றும் கன்னடியன் அணைக்கட்டிலிருந்து 2,765 மில்லியன் கன அடி நீரை, தாமிரபரணி ஆறு, கருமேனியாறு மற்றும் நம்பி ஆறு ஆகிய நதிகளுடன் இணைக்கும் நதிநீர் இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுத் திட்டப் பணிகள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 21.02.2009 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆகியும், இத்திட்டம் 100% முழுமையாக முடிக்கப்படாததால் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், அதிக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. மொத்தம் நான்கு நிலைகளாகப் பணிகள் நடைபெற்ற நிலையில், மூன்று நிலைகளில் கால்வாய்கள் அமைப்பது உள்பட 100% பணிகள் நிறைவு பெற்றது. நான்காவது நிலையில் திட்டப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இதுபோன்ற நிலையில், குமரிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கனமழை நீடித்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணையிலிருந்து சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வரை திறக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாநிதியின் கனவுத் திட்டமான வெள்ளநீர் கால்வாய் பணிகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளநீர்க் கால்வாயில் சோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.