நெல்லை: தென்காசி மாவட்டம், கடையம் அருகில் உள்ள ஆம்பூர் பகுதியைச்சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஆழ்வார்குறிச்சி மின்சார வாரியத்தில் கடந்த 24 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கருத்தப்பிள்ளையூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மின்சாரம் தடை ஏற்பட்டதை சரி செய்ய மின்வாரிய ஊழியர் (போர்மேன்) சீத்தாராமன் என்பவர்,ராமசாமியை அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது கம்பத்தில் ஏறி மின் பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய வலது பக்க உறுப்புகள் அனைத்தும் 70% தீக்காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன், போர்மேன் சீத்தாராமன் மின் இணைப்பை அணைக்காமல், அணைத்துவிட்டதாக தெரிவித்ததால்தான் மின்சாரம் தாக்கியதாகவும் ராமசாமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே ஆழ்வார்குறிச்சி காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சீத்தாராமன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இருப்பினும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்; உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர் ராமசாமியின் வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உத்தரவாதத்தை மின்சாரத்துறை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
'மின் இணைப்பை துண்டித்ததாக பொய் கூறிய போர்மேன்':ஒப்பந்த தொழிலாளர் அளித்த மரண வாக்கு மூலம்! இதையும் படிங்க:பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 குற்றவாளிகள் தென்காசியில் கைது