திருநெல்வேலி: பணகுடி பேரூராட்சி திமுகவைச் சேர்ந்த 1வது வார்டு கவுன்சிலர் கோபி கோபால கண்ணன். கடந்த மாதம் அவரது வார்டில் கழிவுநீர் வாறுகால் அமைப்பதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக நெல்லை மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் பணகுடி பாஜக மண்டல தலைவர் வைகுண்ட ராஜாவுக்கும், திமுக கோபி கோபால கண்ணனுக்கும் அரசியல் ரீதியாக ஒருவருக்கொருவர் பகை உள்ளது. இந்நிலையில் இன்று காலை பணகுடி அருகில் உள்ள நதிபாறை கிராமத்தில் இடம் சம்பந்தமாக திமுகவினர் முறைகேடாக முள்வேலி போடுவதாக பாஜக மண்டல தலைவர் வைகுண்ட ராஜா புகார் தெரிவித்திருந்த நிலையில் திமுக கவுன்சிலர் கோபி கோபால கண்ணனுக்கும் வைகுண்ட ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து பாஜகவினர் கம்பியால் தன்னை தாக்கியதாகப் பேரூராட்சி கவுன்சிலர் கோபி கோபால கண்ணன் பணகுடி போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து அவர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.