திருநெல்வேலி: அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதே முதல் காரியம் என்று பேசி இருந்தார். அவரின் பேச்சு நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.
மேலும் அதே கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி சனாதனமும் இந்து மதமும் வெவ்வேறு அல்ல என்று பேசி இருந்தார். குறிப்பாக இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார் எனவும், வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தனது பொறுப்பில் இருந்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள, நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையாளர் அலுவலகத்தை நெல்லை மாவட்ட பஜகவினர் முற்றுகையிட போவதாக அறிவித்துருந்தனர். அதை தொடர்ந்து நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளர் பிரதீப் தலைமையிலான காவல் படை அறநிலையத் துறை அலுவலகத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.