திருநெல்வேலி:மதிமுக கட்சியின் முக்கிய பிரமுகரான டேனியல் ஆபிரஹாம் இல்லத் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் ஒவ்வொரு மதம் சார்ந்த மக்களும், அவரவர் விருப்பப்படி சடங்குகளை நிகழ்த்தி திருமணங்களை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
ஆனால், இந்த ஒற்றுமையை குலைக்கும் வகையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதை எதிர்த்துப் போராடுகின்ற பெரு சக்தியாக தமிழ்நாடு திகழ்கின்றது. தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற திமுக ஆட்சி அனைத்தும் மத நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை தரும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் மத நம்பிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டி மாநிலமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவை தேர்தலிலும் மாற்றம் நிகழும் என சொல்லும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் கருத்து பட்டப் பகலில் காண்கின்ற கனவு. தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது.