தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சென்னை பெருவெள்ளத்தை தமிழக அரசு கவன குறைவாக கையாண்டுள்ளது" - நயினார் நாகேந்திரன் கருத்து! - Nainar nagendran in thirunelveli

BJP MLA Nainar Nagendran: திருநெல்வேலியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சென்னை பெருவெள்ளத்தை தமிழக அரசு கவன குறைவாக கையாண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 8:17 PM IST

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: நெல்லை தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 30 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழா இன்று(டிச.5) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், "திருநெல்வேலி தொகுதி மக்கள் அனைவரும் வீட்டில் ஒருவராக என்னை நினைத்து ஆதரவு அளித்து வருகிறார்கள். சென்னை பெருவெள்ளத்திற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறினார்கள். எல்லாப்பணிகளும் தயாராக உள்ளதாகக் கூறினார்கள். சென்னை மழை வெள்ளத்தைத் தமிழ்நாடு அரசு கவனக்குறைவாகக் கையாண்டுள்ளது. மழையை அரசியலாக்க விரும்பவில்லை. 4ஆயிரம் கோடி திட்டத்தில் குறைபாடு இருப்பதாக நான் கருதுகிறேன். தவறு செய்திருந்தால் அமலாக்கத்துறை, ராணுவம், நீதிபதி என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் தற்போது, அமலாக்கத்துறை மீது திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இதைக் கருதுகிறேன். அமலாக்கத்துறையிடம் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செயல்பட்டிருக்கலாம். அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுத்ததில் தவறில்லை. இதுகுறித்து எனக்குப் பல சந்தேகங்கள் உள்ளது. அமலாக்கத் துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்றால் நியாயம். ஆனால் இடைத்தரகர்கள் என்று கூறுவதைச் சபாநாயகர் விளக்க வேண்டும்.

இனிமேல் தேர்தல் காலத்தில் கருத்துக் கணிப்புகள் செல்லாது என்பதை இந்த தேர்தல் களம் காட்டுகிறது. 1998 இல் பாஜக கட்சியைச் சேர்க்க மாட்டார்கள் எனக் கூறினார்கள். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எங்களைச் சேர்த்துக் கொண்டார்கள். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை எனக் கூறினார்கள். ஆனால் இப்போது வெற்றி பெற்று இருக்கிறோம். தெலுங்கானா மாநிலத்தில் 15 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்கிறோம். அடுத்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் இந்தியக் கூட்டணி அதன் செயலை இழந்து உள்ளது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றவர்களை அழைத்துப் பேச வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "அகில இந்தியப் பாராளுமன்ற தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்வார்கள். பாஜக உடனான கூட்டணியில் தமிழ்நாட்டிலிருந்தவர்கள் இப்போது நாங்கள் இல்லை என்று சொல்வதற்குக் காரணம் அழைத்துப் பேச வேண்டும் என்று நோக்கத்திற்காகத் தான். தமிழ்நாட்டிலும், தெலுங்கானாவிலும் பாஜக இல்லை. ஆனால் இந்தியாவில் பாஜக தான் உள்ளது. மத்தியில் இன்றும் பாஜக தான். நாளையும் பாஜக தான், எதிர்காலமும் பாஜக தான்.

கட்சி மாறினாலும் ஜெயலலிதாவை நினைவில் கொண்டு தான் இன்று சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டு இருக்கிறேன். வாழ்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை மறக்க முடியாது. ஜெயலலிதா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 41 வயதிலேயே அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஐந்து முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கொடுத்த அவரை எப்படி என்னால் மறக்க முடியும். கட்சி மாறினாலும் இன்றளவும் அவருடைய கொள்கை வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வருகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிங்காரச் சென்னை திட்டம் என்ன ஆனது? விடிவுகாலம் எப்போது? - வானதி சீனிவாசன் அறிக்கை..!

ABOUT THE AUTHOR

...view details