நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் பெரியதுரை. இவர் பாஜக இளைஞர் அணியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார். இவரது வீட்டு அருகில் முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாடார் சமுதாயத்தின் முக்கிய தலைவரான செல்வின் நாடாரின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.
பெரியதுரைக்கும் ஜெபமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (நவ.04) திடீரென ஜெபமணி துப்பாக்கியால் பெரியதுரையின் வலது கையில் சுட்டுள்ளார். இதனால் பெரியதுரை அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் பெரியதுரையை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்ததால் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.