திருநெல்வேலி: நாடு சுதந்திரம் பெற்றிராத 1900 காலக்கட்டங்களில் பல்வேறு தலைவர்கள் மற்றும் போராளிகள் பல வகைகளில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர். அந்த வகையில் தனது புரட்சிகர எழுத்துகள் மூலம் சுதந்திரத்திற்கு வித்திட்டவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இவர் 19 ஆம் நூற்றாண்டின் பொக்கிஷம் என்றே கூறலாம். அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்பாள் தம்பதிக்கு 1882 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார் சுப்ரமணியன். சிறு வயது முதலே தமிழ் புலமை பெற்றிருந்த சுப்பிரமணியன், தனது 11 வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
இவரது தமிழ் புலமையைப் பார்த்து வியந்த எட்டயபுரத்து மன்னர் 'பாரதி' என்ற பட்டம் வழங்கியதால், அன்றிலிருந்து சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார். பாரதியார் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சுதந்திரப் போராட்ட வீரர், ஆசிரியர் என பண்முகத் திறமை கொண்டிருந்தார். குறிப்பாக 1900 காலகட்டங்களில் தனது புரட்சி மிகுந்த எழுத்துக்கள் மூலம் சுந்தர வேட்கையை மக்கள் மத்தியில் புகுத்தினார்.
குடும்ப சூழல் காரணமாக சுப்ரமணிய பாரதியார் 14 வயதில் செல்லம்மாள் என்ற சிறுமியை திருமணம் செய்து கொண்டார். செல்லம்மாளுக்கு திருநெல்வேலி மாவட்டம் கடையம் என்ற கிராமம் தான் சொந்த ஊர். பாரதியார் பாண்டிச்சேரியிலிருந்து வெளியேறிய போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து விடுதலையானதுடன் தனது மனைவியின் சொந்த ஊரான கடையத்துக்குச் சென்றது அனைவரும் அறிந்த ஒன்றே.
கடையத்தில் பாரதியார் சுமார் இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்தார். தற்போது கடையத்தில் பாரதியாரின் நினைவாக அவரது மனைவி செல்லம்மாள் வீடு அமைந்துள்ள பக்கத்து தெருவில் செல்லம்மா பாரதி கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே பாரதி செல்லம்மாள் இருவரும் சேர்ந்து இருக்கும் வெண்கலச் சிலை மற்றும் நூலகம் அமையப் பெற்றுள்ளன.
கடையத்தில் வசித்தபோது பாரதி மன அமைதியோடு இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் வைத்து ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இந்த நிலையில் பாரதியார் கடையத்தில் இரண்டு ஆண்டுகள் வசித்து சென்ற நினைவுகளை கண்முன் நிறுத்தும் வகையில், சென்னையை சேர்ந்த சிவாலயா என்ற தொண்டு நிறுவனம் சார்பில் கடையம் ரயில் நிலையத்தில் "மீண்டும் கடையம் திரும்பினான் பாரதி" என்ற பெயரில் பாரதியாரின் ஓவியங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர்.
ஓவியர் மாரி தலைமையில் மாணவர்கள் தன்னார்வலர்கள் பலர் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாரதியார் கடலூர் சிறையில் இருந்து விடுதலை ஆகி நேராக கடையத்துக்கு ரயிலில் தான் வந்து இறங்கினார். எனவே கடையம் ரயில் நிலையத்தில் அவர் வந்து இறங்குவதில் தொடங்கி கடையத்தில் தனது மனைவி செல்லம்மாளின் வீட்டில் வசித்து வந்த நினைவுகள், கடையம் வீதிகளில் அவர் உலா வந்த நினைவுகள், அங்குள்ள குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய நினைவுகள் போன்ற காட்சிகளை ஓவியமாக வரைந்து வருகின்றனர்.