கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தொழில்துறைகளை ஆட்டம் காணச் செய்தாலும், சில நல்ல மாற்றங்களும் நடைபெற்றுள்ளன. ஊரடங்கு காரணமாக, அமைக்கப்பட்ட கரோனா முகாம்களில்தான் அந்த அதிசய மாற்றம் நடந்துள்ளது. கோயில்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் மனிதர்களை கடவுளாக பாவித்து யாசகம் கேட்கும் யாசகர்களை நாம் பார்த்திருப்போம்.
’இவர்களுக்கென்ன குறை, ஏன் யாசகம் கேட்க வேண்டும்? வேலைக்குச் சென்றால்தான் என்னவாம்?’ என விமர்சிக்கவும் செய்திருப்போம். அவர்களிடம்தான், இப்போது மாற்றம் பிறந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், பசியின் கொடூர பிடியிலிருந்து ஆதரவற்றோரை மீட்டு, டவுன் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைத்து உணவளித்துவருகிறார் திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். அவர்களை கவனித்துக்கொள்ள சில தன்னார்வலர்களை நியமித்த ஆட்சியர், பயனுள்ள வகையில் ஊரடங்கு நாட்களை ஏற்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.
கரோனா முகாமின் செயல்பாடுகள்:
- முதல் கட்டமாக, வெளியூர் செல்ல முடியாமல் வீதியில் தங்கி, முகாமிற்கு வந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
- இரண்டாம் கட்டமாக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனை மனநல மருத்துவர், மருத்துவ ஆலோசனை வழங்கிவருகிறார்.
- மீதமிருக்கும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக உடல் பராமரிக்கப்பட்டு, புத்தாடைகள் அணிந்து புது நபர்களாக மாற்றப்பட்டனர். வீட்டிலிருக்கும் நபரை போல, தரைவிரிப்போடு சுத்தமான இடத்தில் படுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆதரவற்ற முதியோரையும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் முகாமில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.