திருநெல்வேலி:ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. எனவே ரிலீஸ் தேதி எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று (ஏப்.13) திட்டமிட்டபடி படம் வெளியானது.
அந்தவகையில் நெல்லை சிட்டியில் மொத்தம் 6 திரையரங்குகளில் இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில் நெல்லையில் நேற்று (ஏப்.12) பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.
அதன்படி திரையரங்கிற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தவோ, பேனர்கள் வைக்கவும் போலீசார் தடை விதித்தனர். மேலும் இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை சார்பில் அனைத்து திரையரங்குகள் முன்பு அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.
கடந்த 2ஆம் தேதி பீஸ்ட் ட்ரைலர் வெளியான போது நெல்லை சந்திப்பு மதுரை சாலையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ட்ரைலர் பார்த்த வேகத்தில் ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளைச் சேதப்படுத்தியும் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.