திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று மிக வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கடந்த நான்கு நாள்களாக மாவட்டம் முழுவதும் சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் புதிய உச்சமாக நேற்று (ஏப்.13) நெல்லை மாவட்டத்தில் 217 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக தற்போது திருநெல்வேலியின் முக்கிய நீர்நிலையான தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் கூட்டமாகக் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா தொற்று எச்சரிக்கை காரணமாக தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் கூட்டமாகக் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டான இன்று (ஏப்.14) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி அருகில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.
இந்தச் சூழ்நிலையில் ஆற்றில் கூட்டமாகக் குளிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் ஆற்றில் கூடுவதைத் தவிர்க்கும்விதமாக கண்காணிக்க காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்த இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மளமளவென மீண்டும் உயரும் பாதிப்பு: மேலும் 1.84 லட்சம் பேருக்கு கரோனா