நெல்லை: அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசால் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாராணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்பவர் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் சிசிடிவி கேமராவை உடைத்த வழக்கில் தன்னுடைய பல்லை பல்வீர் சிங் பிடுங்கியதாகவும், பின்னர் போலீசார் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து மிரட்டி பிறழ்சாட்சியாக மாறச் சொன்னதாகவும் கூறினார்.
மேலும் இந்த பல் பிடுங்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சந்தோஷ் மற்றும் அருண்குமார் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வீர் சிங் மீது கொலை மிரட்டல், கையால் காயப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது