திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் விசாரணை அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் எழுந்த புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு புகார் வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி, சார் ஆட்சியர் நீதி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து 26 ஆம் தேதி முதல் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.
இதில் பத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்பாசமுத்திரம் விகே புரம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களிலும் இருக்கும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏ எஸ் பி பணியிட நீக்கம் செய்யப்பட்டார். இது தவிரத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட உளவுத்துறை ஆய்வாளர், அம்பாசமுத்திரம் விகே புரம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், தனி பிரிவு உதவி ஆய்வாளர், உளவு பிரிவு காவலர்கள், தனி பிரிவு காவலர்கள் என எட்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 3ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் சேரன்மகாதேவி மற்றும் சார் ஆட்சியர் முகமது சபீர் ஆழமிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் அமுதா நியமனம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்த அவர் வண்ணாரபேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தார். அங்கு அவரை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆழம் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட விசாரணை அறிக்கை உயர்நிலை விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.