நெல்லை: காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை உரிமையாளர் இயக்க முயன்றபோது ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எதனால் ஆட்டோ தீப்பற்றியது என்பது குறித்துக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் பாலமுருகன்(29) இவர் ஆட்டோக்களை வைத்து தொழில் நடத்தி வருகிறார். அதில், ஒரு ஆட்டோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை தினசரி மார்கெட் பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதால் அந்த ஆட்டோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்தியதற்கான அபராத தொகை செலுத்தி விட்டு சுமார் 40 நாட்கள் நாட்கள் கழித்து ஆட்டோவின் உரிமையாளர் பாலமுருகன் இன்று (நவ.5) தனது ஆட்டோவை இயக்க முயற்சி செய்தார். ஆனால் நீண்ட நாட்களாக இயங்காமல் நிறுத்தி வைத்திருந்ததால் பழுது காரணமாக ஆட்டோ இயங்கவில்லை. எனவே, மெக்கானிக்கல் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஆட்டோவை பாலமுருகன் இயக்க முற்பட்ட போது திடீரென ஆட்டோ தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்துக் கொண்ட பாலமுருகன் உடனடியாக ஆட்டோவை விட்டு விலகி ஓடிச் சென்றார். இதனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.